சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?


சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள். அது கூடாது. சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம். 

சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது. ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது. வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி தொண்டை வறண்டுகொண்டேயிருக்கும். அடிக்கடி தாகமெடுக்கும். அவர்கள் மட்டும் மொத்தமாகக் குடிக்காமல், கொஞ்சமாகச் சிப் சிப்பாக அருந்தலாம்.’’ 'நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது. இயற்கையின் நியதியே அதுதான். 'விக்கல் ஏற்படுகிறது, அடைத்துக்கொள்கிறது. அதனால்தான் குடிக்கிறோம்’ என்று சிலர் காரணம் சொல்வார்கள். 

இதற்கு, உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடும் முறை தவறு என்றுதான் அர்த்தம். சாப்பிடும்போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் விக்கல் எடுக்காது. தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அதையும் மீறி விக்கல் வந்தால் கொஞ்சம் குடித்துக்கொள்ளலாம். 'சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?' என்பார்கள் சிலர். அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். 'தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. தாகம் எடுக்கும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால், இன்று நாம் வேலை பார்க்கும் சூழல், குளிரூட்டப்பட்ட அறைகளில் தாகம் எடுப்பதே இல்லை. அதற்காக தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. ஆனால், குறைவாகக் குடிப்பதால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகும் அரை மணி நேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது. நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை. காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

Post a Comment

0 Comments