உடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா?


உடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க போதும்...

பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸ் பல வழிகளில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி வருகிறது. இந்த வைரஸ் கிருமி நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தொற்றுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், பலரும் தங்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர்.

ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறப்பான எளிய வழி என்றால் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது தான். குறிப்பாக மருத்துவர்கள் எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள், வைட்டமின் சி உணவுகள், ஜிங்க் உணவுகள் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.


இப்போது நாம் பார்க்கவிருப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டிய ஒரு அற்புதமான பானம் குறித்து தான். இந்த பானத்தில் உடலை சுத்தம் செய்யும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. சரி, இப்போது அந்த பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்: 

  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் * 
  • நற்பதமான இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) * 
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் * 
  • தேன் - சுவைக்கேற்ப * 
  • தண்ணீர் - 1 டம்ளர்
எலுமிச்சையின் நன்மைகள் - வைட்டமின் சி அதிகம் நிறைந்த பொருட்களுள் ஒன்று எலுமிச்சை. இது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றக்கூடியது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், காப்பர், பொட்டாசியம் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளன. எலுமிச்சை ஜூஸ் அஜீரண பிரச்சனை மற்றும் பல்வேறு குடல் சம்பந்தமான தொல்லைகளில் இருந்தும் விடுபட உதவும். எலுமிச்சையில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது.

இஞ்சியின் நன்மைகள் - இஞ்சியில் ஜின்ஜெரால் என்னும் ஆக்டிவ் பொருள் உள்ளது. இது உடலுக்கு வலி நிவாரணி, மயக்க மருந்து, ஆன்டி-பைரிடிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் விளைவுகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமான அளவில் உள்ளது. இதனால் இஞ்சி செரிமான மண்டலத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் மற்றும் பலவற்றிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது.

மஞ்சளின் நன்மைகள் - மஞ்சளில் குர்குமின் என்னும் உடலை சேதப்படுத்தும் ப்ரீ ராடிக்கல்களைத் தடுக்கும் பொருள் உள்ளது. மஞ்சளில் உள்ள மற்றொரு பொருளான லிப்போபாலிசாக்கரைடு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் விளைவுகளுக்கு பிரபலமானது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்தக்கூடியது. அதோடு, மஞ்சள் சரும ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியம், நல்ல செரிமானம் மற்றும் எடை இழப்பு போன்றவற்றிற்கும் உதவக்கூடியது.

தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அத்துடன் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி வடிகட்டி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது சுவைக்கேற்ப தேன் அல்லது வெல்லம் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments